இந்திய வாலிபால் சம்மேளன தேர்தலை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில், இடைக்கால உத்தரவுகளைப் பெற்ற பின், மனுவை வாபஸ் பெற அனுமதி கோரிய கோவா வாலிபால் சங்கத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வாலிபால் சம்மேளனத்துக்கு, மார்ச் 12-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அதன் தலைவரும், 15-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என சம்மேளன செயலாளரும் அறிவிப்புகளை வெளியிட்டனர்.
தேர்தலை எதிர்த்து கோவா வாலிபால் சங்கம் தொடர்ந்த வழக்கில், இந்த தேர்தலுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தடையை எதிர்த்த வழக்கில், தேர்தல் நடத்த அனுமதியளித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் முடிவுகளை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கோவா வாலிபால் சங்கம் தொடர்ந்த பிரதான வழக்கு, நீதிபதி சதீஷ் குமார் முன் மீண்டும் விசாரனைக்கு வந்த போது, சம்மேளனத் தலைவர் நடத்திய தேர்தல் முடிவுகள் மட்டும் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், சம்மேளன தலைவர் நடத்திய தேர்தல் செல்லாது என, செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் கூறி, வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி, கோவா வாலிபால் சங்கம் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கை வாபஸ் பெற கோவா வாலிபால் சங்கத்துக்கு அனுமதியளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், நீதிமன்ற நேரத்தைப் பயன்படுத்தி, இடைக்கால உத்தரவுகளைப் பெற்றபின், வழக்கை வாபஸ் பெறுவதால், கோவா வாலிபால் சங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த அபராத தொகையை, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உத்தரவை அமல்படுத்தியது குறித்து, நவம்பர் 30-ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தினார்.