Skip to main content

பல் பிடுங்கிய விவகாரம்; புகார் அளிக்க தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் வெளியீடு! 

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

A gnashing of teeth affair; Issue contact number and email to complain!

 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26.03.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவிடப்பட்டது. மேலும், இந்நிகழ்வில், பல்வீர் சிங் கடந்த 29.03.2023 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

 

மேற்படி புகார்கள் தொடர்பாக சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை கடந்த 3 ஆம் தேதி ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கடந்த 04 ஆம் தேதி கடிதத்தின் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்திருந்தார்.  

 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் இவ்வழக்கு குறித்து முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் நாளை முதல் விசாரணை நடத்த இருக்கும் நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியருடன் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாவட்ட துணை காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 11 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் முதன்மைச் செயலாளர் அமுதா நாளை முதல் தனது விசாரணையை மேற்கொள்ள உள்ளார். இந்த விசாரணை நெல்லை மாவட்ட விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் மீண்டும் புகார், வாக்குமூலம் அல்லது கூடுதல் தகவல் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் வரலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

 

பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களும் புகார் அளிக்கலாம் என்றும் நேரில் வந்தோ அல்லது நேரில் வர இயலாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் வாக்குமூலம் அல்லது தகவல் அளிக்கலாம் எனவும் 8248887233 என்ற எண்ணிலும் தங்களது புகார்களை அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்