
விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி பலவீர் சிங் தற்போது நேரில் ஆஜராகி உள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லை பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி திருவேணி முன்னிலையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உட்பட 15 காவலர்கள் நேரில் ஆஜராகி உள்ளனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்களும் பல்வீர் சிங் தரப்பு வழக்கறிஞர்களும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக சற்று நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் நடைபெற்று வருகிறது. விசாரணையில் இருதரப்பு வழக்கறிஞர்கள் வைக்கும் வாதங்கள் குறித்த தகவல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.