தமிழக முதல்வரும் துணை முதல்வரும் மக்களின் கட்டாயத்தின் பேரில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி நீர் பிரச்சனையின் முக்கியத்துவத்தை அனைத்து தமிழக மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான் தொழிலாளர்கள், வனிகர்கள், மாணவர்கள் பல தரப்பு மக்களும் நேரடியாக போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர். மத்திய அரசும் மாநில அரசும் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது. காவிரி தண்ணீர் திறக்காமல் 4 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்தும் ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது விதிமீறலை மீறிய செயல் ஆகும்.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் மக்களின் கட்டாயத்தின் பேரில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும், நியாயம் கிடைக்கவேண்டும் என்று தமிழக மக்கள் போராடுகின்றனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிஉள்ளேன். மேலும் இதனை வலியுறுத்தி டெல்டா மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். உலகத்தமிழர்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வாரியம் அமைக்க வேண்டுகோள் விடுக்கவேண்டும் மாணவ, மாணவியர் இதனை முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்