Skip to main content

'வாக்குறுதிகள் குறித்த ரிப்போர்ட் கார்டு வழங்குக' - கமல்ஹாசன்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

'Give a report card on promises' - Kamal Haasan!

 

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் வழங்குவதை உறுதி செய்யுங்கள் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (26/10/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் இன்றுவரை நிறைவேற்றப்படாத மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை இப்போது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் 491வது வாக்குறுதி, 'திட்டங்கள் செயலாக்கம் என்கிற புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்படும்' எனச் சொல்கிறது. 

 

அதன் விவரம் பின்வருமாறு, 'திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் எனும் பெயரில் ஒரு புதிய அமைச்சகம் அமைக்கப்பட்டு, மூத்த அமைச்சரின் பொறுப்பில் இருக்கும். இந்த அமைச்சகத்துக்கு கீழ்க்காணும் அலுவல்கள் பொறுப்பாக்கப்படும். 

 

மாநிலத் திட்டக்குழு இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும். மேலும், இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள் மற்றும் செயல் அம்சங்கள் மீதான இலக்குகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதை இந்த அமைச்சகம் கண்காணித்து நிறைவேற்றும். 

 

தேர்தல் நேரத்தில் பொதுமக்களால் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை 100 நாட்களுக்குள் எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவதைக் கண்காணிக்கும். 

 

அரசு பதவியேற்ற 100வது நாளன்று, முதலமைச்சர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்பார். 

 

ஒவ்வொரு மாதத்தின் முதல் பணி நாளன்றும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை முதலமைச்சர் மேற்கொள்வார். அதனைத் தொடர்ந்து, ஊடகங்களைச் சந்தித்து தலைவர் தளபதி அவர்களின் கலைஞர் அரசின் சாதனை அறிக்கையை (Report Card) ஊடகங்களுக்கு வழங்குவார்'. இவ்வாறு சொல்கிறது அந்த வாக்குறுதி. 

 

திமுக அரசு பதவியேற்று இன்றுடன் 173 நாட்கள் ஆகியுள்ளன. இதுவரை 200 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஊடகச் சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு கூட்டங்களில் தெரிவித்துவருகிறார். ஆனால், 'திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும் மற்றும் மாதந்தோறும் ஊடகங்களிடம் ரிப்போர்ட் கார்டு வழங்கப்படும்' என்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படவில்லை. 

 

வரும் நவம்பர் 1- ஆம் தேதி திங்கட்கிழமை மாதத்தின் முதல் பணி நாளாகவே அமைகிறது. அந்த நாளுக்கு வேறொரு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. அந்நாளில்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்தச் சிறப்புமிக்க நாளில் இருந்து, மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடகங்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்