திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள காரைக்குடி உணவக மாடியில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது டியூக்ஸ் பார் (தனியார் மதுபானம் குடிக்கும் கடை). இங்கு அரசு அதிகாரிகள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் வந்து வழக்கமாக மது அருந்திவிட்டுச் செல்வார்கள்.
அதேபோல், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தக் கடைக்கு மூன்று பெண்கள் அரைக்கால் சட்டையுடன் வந்து மது அருந்துவது வழக்கம். மேலும் மது அருந்திவிட்டு மூன்று பெண்களும் நடனமாடிவிட்டு செல்வார்கள். அவர்கள் நடனமாடும்போது மது அருந்த வரக்கூடிய வாலிபர்கள் சிலர் அவர்களைக் கிண்டல் செய்வது, கையைப் பிடித்து இழுப்பது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்கள் நடந்தாலும் நிர்வாகமே அதை சரி செய்துவிடும்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (19.04.2021) இரவு அந்த மூன்று பெண்களும் மது அருந்திவிட்டு நடனம் ஆடியபோது, இளைஞர்கள் அந்தப் பெண்களில் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண்களில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இருந்து பெண் காவலர்கள் மதுபான விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது மூன்று பெண்களும் குடிபோதையில் இருந்துள்ளனர். அவர்களைப் பெண் போலீசார் மாடியிலிருந்து கீழே அழைத்து வந்துகொண்டிருந்தனர். இதேபோல் அவர்களிடம் அத்துமீறிய இளைஞர்களையும் காவல்துறையினர் கீழே அழைத்து வந்துகொண்டிருந்தனர். இதனிடையே, இந்த விவகாரம் பற்றி அறிந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்த அந்த மூன்று பெண்களையும் பாதுகாப்பாக ஆட்டோவில் அனுப்பி வைத்தார். மேலும் அத்துமீறிய இளைஞர்களை எச்சரித்தும் அனுப்பியுள்ளார்.
அந்த மூன்று பெண்கள் மீது இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. மது போதையில் இருந்த அவர்களிடம் கேட்டபோது, ''ஏன் பெண்கள் குடிப்பதற்கு உரிமை இல்லையா? பெண்கள் குடிப்பதற்கு தனியாக பகுதியை ஒதுக்கிக் கொடுங்கள்'' என பெண் போலீசாரிடமும் நிர்வாகத்திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மூன்று பெண்கள் யார்? உதவி செய்த போலீசாருக்கும் அந்தப் பெண்களுக்கும் என்ன தொடர்பு? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.