தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ளது கல்லூத்து. இங்குள்ள கூலித் தொழிலாளியான பொன்ராஜூ (30) என்பவருக்கும், நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரம் பக்கமுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகள் சங்கீதா (20) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் (22.07.2021) பொன்ராஜ் வழக்கம்போல் கூலி வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் சங்கீதா மட்டுமே தனியாக இருந்திருக்கிறார்.
அந்த சமயம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் நுழைந்து சங்கீதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். இதில் அதிகளவில் ரத்த வெளியேறி சம்பவ இடத்திலேயே சங்கீதா உயிரிழந்துள்ளார். தகவலறிந்து ஸ்பாட்டிற்கு வந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், வீ.கே.புதூர் எஸ்.ஐ. காஜா மைதீன் உள்ளிட்ட போலீசார், அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினர். அதன் பின் சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இந்த மர்மக் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த அன்று அந்தத் தெருவில் உள்ளவர்கள், கிராமத்தில் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டனர். அது சமயம் தெருவே காலியாக இருந்தது. அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பைக்கில் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றதைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தகவலைக் கொண்டு போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில் கொலைக்கான மர்மம் வெளிப்பட்டிருக்கிறது.
சங்கீதாவை கொலை செய்தது அவரது முதல் கணவரான கண்ணன் என்பது தெரியவந்திருக்கிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அம்பை அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த நாரயணனின் மகன் கண்ணன் (30) என்பவருக்கும் சங்கீதாவிற்கும் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப் பின்பு ஒரு மாதம்வரை அவர்களுக்கிடையே பிரச்சனை இல்லாமல் போயிருக்கிறது. அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட பிணக்கால் சங்கீதா, கண்ணனைவிட்டுப் பிரிந்து தன் தாய்வீடு சென்றிருக்கிறார். திருமணமாகி ஒரே மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், கண்ணனின் உறவினர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் பெண் வீட்டாரிடம் பேச்சு நடத்தியும் இருவரும் ஒன்றுசேர முடியமால் போயிருக்கிறது.
இப்படியே இரண்டு வருடம் கழிந்த நிலையில், மேலும் முறையாக இவர்களுக்குள் விவாகரத்து பெறாத சூழ்நிலையில்தான் சங்கீதாவிற்கு கடந்த 60 நாட்களுக்கு முன்பு கல்லூத்தைச் சேர்ந்த பொன்ராஜை இரண்டாவது திருமணம் செய்துவைத்துள்ளனர். பொன்ராஜூம் இதனை அறிந்தவர்தான். இதனிடையே சங்கீதா தன்னை விட்டுவிட்டு இன்னொருத்தரை இரண்டாம் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முதல் கணவர் கண்ணன், அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்திருக்கிறார். அந்த நோக்கத்தில்தான் அன்றைய தினம் கண்ணன் பைக்கில் கல்லூத்திற்கு வந்திருக்கிறார். அது சமயம் அந்தத் தெருவாசிகள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றது கண்ணனுக்கு வாய்ப்பாகிவிட்டது. அதேநேரம் பொன்ராஜூம் கூலி வேலைக்குச் சென்றுவிட, தனியாக இருந்த சங்கீதாவைக் கண்ணன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவுசெய்த வீ.கே.புதூர் போலீசார், முதல் கணவரான கண்ணனை கைது செய்திருக்கிறார்கள்.
முறைப்படி விவாகரத்து பெறாமலும் வீட்டில் தனியே இருந்த பெண் ஒருத்தி திருமணமாகி அறுபதே நாளில் கொலை செய்யப்பட்டதும் அந்தக் கிராமத்தைப் பீதியில் தள்ளியிருக்கிறது.