இந்தக் கொடுமையை வழக்காக எப்படி பதிவு செய்வது என்று எழுதும்போதே கலங்கிவிட்டதாம் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையம்.
ஆம். அத்தனை வில்லங்கமாக இருக்கிறது, கரோனா காலத்து தனிமையில், 9ஆம் வகுப்பு மாணவியான செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கர்ப்பம் தரித்து, ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ள விவகாரம்.
செல்வியின் அம்மா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர். செல்வியின் அப்பா இறந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. அவளது அம்மாவுடைய தங்கையின் கணவர் ராமருக்கு 29 வயதுதான் ஆகிறது. கரோனா பரவல் காரணமாக, பள்ளியின் தொடர் விடுமுறையில் வீட்டிலேயே இருந்திருக்கிறாள் செல்வி. அவளுடைய அம்மா வேலைக்குச் சென்றபிறகு, சித்தப்பா ராமர் அடிக்கடி வீட்டுக்கு வந்திருக்கிறான். ‘இதெல்லாம் தப்பே இல்லை’ என்று சிறுமியான செல்வியிடம் அத்துமீறியிருக்கிறான். அவள் சண்டையிட்டு மறுத்தபோது, ‘கணவன் இல்லாமல் தனியாக வாழும் உன் அம்மாவைக் கேவலப்படுத்துவேன். உன் சித்தியுடனும் வாழமாட்டேன்’ என்று மிரட்டி சீரழித்திருக்கிறான். முறை தவறிய இத்தகாத உறவை மீண்டும் மீண்டும் தொடர்ந்தபோது ‘உன்னையும் உன் அம்மாவையும் கொன்றுவிடுவேன்’ என்று கட்டாயப்படுத்தியிருக்கிறான்.
ஐந்தாவது மாதத்தில் செல்வி கர்ப்பமான நிலையில், அவளுடைய அம்மாவும் சித்தப்பா ராமரும், ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுகூட, சித்தியின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்ற பயத்தில், சித்தப்பா ராமர்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என்பதை அம்மாவிடம்கூட செல்வி சொல்லவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் (25ஆம் தேதி) இடுப்பு வலித்ததும், திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக செல்வியைச் சேர்த்துள்ளனர். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 14 வயது சிறுமியான செல்வி, அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த தகவல், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்துள்ளது. மகளிர் ஏட்டு ஒருவர் விசாரித்தபோது, தான் மிரட்டப்பட்டு சித்தப்பா ராமரால் கர்ப்பமானதைச் சொல்லியிருக்கிறாள். போக்சோ சட்டத்தில் கைதாகியிருக்கிறான், மகள் உறவுள்ள சிறுமியிடம் மிருகமாக நடந்துகொண்ட ராமர்.
எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், செல்வியும் அவளது குழந்தையும், இச்சமூகத்தை எதிர்கொண்டு, எப்படி வாழப்போகின்றனரோ?