தருமபுரியை அடுத்த மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் - தேன்மொழி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், தேன்மொழி மீண்டும் கருவுற்றார். இந்நிலையில், கடந்த 7 நாட்களுக்கு முன்பு தருமபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையுடன் தேன்மொழி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தந்தை முத்துவேல் குழந்தை பிறந்ததால், நேர்த்திக்கடன் செலுத்த திருத்தணி சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (12.08.2021) வீட்டில் இருந்த குழந்தை திடீரென இறந்துவிடுகிறது.
இதுகுறித்து கோவிலுக்குச் சென்ற முத்துவேலுக்கு குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டு, வீட்டின் அருகே குழந்தையைப் புதைத்துவிட்டனர். பிறந்த 7 நாட்களேயான பெண் சிசு, மர்மமான முறையில் இறந்தது குறித்து அப்பகுதியில் உள்ள கிராம செவிலியர், தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுத்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்ததில், குழந்தைக்குப் பாலில் விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் குழந்தையின் தாய் மற்றும் பாட்டி உமா ஆகியோரிடம் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், தேன்மொழியின் தாய் உமா, மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், அக்குழந்தைக்குப் பாலில் விஷம் கலந்து கொடுத்து சிசுக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பாட்டி உமாவை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். பிறந்த 7 நாட்களேயான பெண் சிசுவிற்குப் பாலில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெண் சிசுக் கொலைகள் அதிகரித்திருந்தன. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு செய்தும் தொட்டில் குழந்தை திட்டத்தையும் திறந்துவைத்ததால், சிசுக் கொலைகள் குறைந்துவந்தன. இந்நிலையில், மீண்டும் சிசுக்கொலை தலைதூக்கியுள்ளது. இதனால் சிசுக்கொலையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.