‘அரசியல் எதிர்காலம் வளமாக அமைய வேண்டுமென்றால் பொதுத்தேர்தலில் வெற்றி என்பது அரசியல்வாதிகளுக்கு அவசியமாகிறது. அது என்ன வளமான எதிர்காலம் என்றால், அனைத்துத் துறையிலும் லஞ்சம், ஊழல் என தவறான வழிகளில் முறைகேடாக, கோடி கோடியாகப் பணம் குவித்து, தலைமுறை தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதுதான். அரசியல் தலைவர்களின் வருங்கால தலைமுறையினரும், அதே வழியில் நாட்டைச் சுரண்டுவதற்கு, பெரும் முதலீடாக தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் கரன்ஸி குவியல்களிலிருந்து சிறிதளவு எடுத்து, ஓட்டுக்கான பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்வதென்பது, தமிழகத்தில் வாடிக்கையாக நடந்துவருகிறது. இந்தப் பாராளுமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும், நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் இந்த நடைமுறை, கட்சி பாகுபாடின்றி பின்பற்றப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், தங்களின் கடந்த கால ஊழலையும், எதிர்கால ஊழலையும் மக்களின் ஆதரவோடு, ஓட்டுக்குப் பணம் தருபவர்களால் எளிதாகச் செய்துவிட முடியும் என்பதே. காரணம், அனைத்துத்துறை ஊழலிலும் ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களையும் பங்குதாரர்களாக ஆக்கிவிடுவதுதான்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது, நாட்டு மக்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன், அவருக்காக குரல் கொடுத்தனர். சென்னை வெள்ளச் சேதமோ, கஜா புயல் பாதிப்போ, மாநிலம் முழுவதும் பரவலாக, நிதியளித்து மக்களின் துயர் துடைத்தவர் அனேகம் பேர். விளையாட்டை விளையாட்டாக கருதாமல், கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று தவிப்புடனே பார்க்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நாட்டுப் பற்று குறித்து வலைதளங்களில் கோடிக்கணக்கான இளைஞர்கள் பொங்கிவருகிறார்கள்.
எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டுமென்று ஒரு பெண் துணிந்துவிட்டால், அவளால் அது முடியும். பாரத மண்ணில், மானம் பெரிதென்று வாழ்பவர்கள்தான் எங்கெங்கும் உள்ளனர். அதனால்தான், சொற்ப கூலிக்காக கல்லுடைக்கிறார்கள்; மண் சுமக்கிறார்கள். பொசுக்கும் வெயிலில் கட்டுமானப் பணியில் ஈடுபடுகிறார்கள். தார்ச்சாலை போடுகிறார்கள். உழைத்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்வதுதான் வாழ்க்கை என்பதில் உறுதியாக இருக்கும் மக்கள் தொகையே நம்நாட்டில் அதிகமாக இருக்கிறது. தேசத் தலைவர்களான மகாத்மா காந்தியைப் போற்றுகிறார்கள். அம்பேத்கருக்கு மரியாதை செய்கிறார்கள். வ.உ.சி., காமராஜர், கக்கன் என நாடே பெரிதென வாழ்ந்த தலைவர்களை மதிக்கிறார்கள்.
இத்தனை சிறப்பு பெற்ற நம் மக்களைத்தான், தேர்தலின் போதெல்லாம் எளிதாக விலை பேசிவிடுகிறார்கள் அரசியல்வாதிகள். சுயநலம் மிக்க ஊழல் பேர்வழிகள், நாட்டின் முன்னேற்றத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும் தவறான நடவடிக்கைகளுக்காகப் பணத்தை விட்டெறிந்து, தங்களின் வாக்குரிமையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் மக்கள். இதுகுறித்து இந்தத் தேர்தல் நேரத்தில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ சிவகாசி, பள்ளபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேருகாலனியில், சமூக அக்கறை கொண்ட சிலர், ‘மக்கள் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி கலந்தாலோசித்து, மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.
தீர்மானம் நிறைவேற்றியதும், உறுதிமொழி எடுத்து, பள்ளபட்டி பகுதியில் வீடுவீடாகச் சென்று, ‘ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள்’ என்று எடுத்துச்சொல்லி, அந்த வீட்டில் உள்ளவர்கள் சம்மதத்துடன், ‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்றும், ‘நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்றும் அச்சிட்ட அறிவிப்புக்களை அந்த வீட்டுச் சுவரில் ஒட்டியிருக்கின்றனர்.
நேரு காலனி மக்கள் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கண்ணன் “ஒரே ஒரு தடவை ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டு ஐந்து ஆண்டுகள் எதுவும் கேட்க முடியாத அவலநிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள் மக்கள். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதுகூட சட்டமாகவும் சம்பிரதாயமாவும்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையான தேசப்பற்று என்பது, ஓட்டுக்குப் பணம் வாங்காமல் இருப்பதுதான். வாக்குரிமை குறித்து, மத்திய அரசும், மாநில அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் எவ்வளவோ பணம் செலவழித்து மக்களிடம் விளம்பரப்படுத்துகிறது. ஆனாலும், அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், மக்கள் வாங்குவதையும் தடுப்பதில் வேகம் காட்டுவதில்லை. ஏனென்றால், அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கிறது. நாடு முழுவதும் நல்லவர்களே அதிகமாக உள்ளனர். எங்களின் வேண்டுகோளெல்லாம், நல்லவர்கள் ஒன்றுசேர்ந்து, அறியாமையில் உள்ள மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டுமென்பதுதான். ஓட்டுக்குப் பணம் வாங்குவது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்றார். தாய்த்திருநாட்டின் மானம் பெரிதல்லவா? நாட்டைக் காப்பது நம் கடமையல்லவா? .