கோவையில் ஜாக்டோ- ஜியோ 6 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கோவையில் 6 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இன்று இரவு கும்மியடித்தபடி, பாடல் பாடியும், நடனம் ஆடி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் 50 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8 வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிகைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கும்மியட்டித்தபடு ஆடல் பாடலும் உடன் வெளிபடுத்தினர். இதில் தமிழக அரசே தமிழக அரசே உங்க வாக்குறுதி என்னாச்சு, ஜாக்டோ ஜியோவின் கோரிக்கை நிறைவேற்று என்ற பாடலுக்கு நடனமாடி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போரட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து அங்கேயே உறங்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அப்போது போலீசார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்ததையடுத்து 50 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். நாளையும் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-அருள்