திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இளஞ் சிறார்களைச் சீரழிக்கும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மற்றும் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 6 ஆம் தேதி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 22 கிலோ கிராம் (மதிப்பு ரூ.20,000) புகையிலை போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த காமராஜ் நகரைச் சேர்ந்த அன்புரோஸ்(22) மற்றும் பூமிநாதன் (40), ஆகியோர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் அன்புரோஸ் மீது புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், பூமிநாதன் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே அன்புரோஸ் மற்றும் பூமிநாதன் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெரியவர் மற்றும் சிறுவர்களுக்குத் தொடர்ந்து விற்பனை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், சம்பந்தப்பட்ட நபர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலிருந்து வரும் அவர்களுக்குக் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.