இந்தியாவையே உலுக்கிய பவாரிய கொள்ளை கும்பல் 1990களில் தென்னிந்தியாவில் தனது கொடூர கொலை, கொள்ளைகளை அரங்கேற்றியது. லாரிகளில் தனி ரகசிய அறை அமைத்து, அதில் ஆயுதங்களையும், கொள்ளையர்களையும் மறைத்து அழைத்துவந்து, தனி வீடுகளை நோட்டமிட்டு பின் நள்ளிரவு வேளையில் தனது கும்பலுடன் சென்று, கொடூரமாக தாக்கி கொள்ளையடித்து வந்தது. இவர்களை லாரி கொள்ளையர்கள் என்று அழைத்தனர். 2000 ஆம் ஆண்டுகளுக்கு மேல் இந்த பவாரியா கும்பலின் கைவரிசை தென்னிந்தியாவில் அதிகமாக இருந்துவந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாவட்டங்களில் பல வழக்குகள் பதிவாகின. தென்னிந்திய காவல்துறைக்கே இது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
இவர்களின் கொடூர தாக்குதலில் 18 உயிர் பலிகளும், 64 பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். தமிழ்நாடு காவல்துறையின் மிக கடுமையான முயற்சியால் அந்தக் கொடூர கொள்ளை கும்பல் சுட்டுப் பிடிக்கப்பட்டது. இதனால் அடங்கியிருந்த இந்த லாரி கொள்ளையர்கள் மீண்டும் தென்னிந்தியா பக்கம் தங்கள் கைவரிசையை துவங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஆந்திர மாநில எல்லை பகுதியான, கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் கிராமத்தில் இருக்கும் ஏ.டி.எம் மிஷினை நள்ளிரவு நேரத்தில் நுழைந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து வீடியோ பதிவு ஆகாதபடி செய்துவிட்டு, காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் மிஷினை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
அதே நேரத்தில் ஏ.டி.எம் மிஷின் அலாரம் அடித்ததால், ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்டு கொள்ளையர்கள் தாங்கள் கொண்டுவந்த காரில் தப்பிச் சென்றனர். அந்த நேரத்தில் வழியில் வாகன சோதனை சாவடியில் போலீசார் உள்ளதைக் கண்டு அந்தக் காரை நடுரோட்டிலே விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடினர்கள். போலீசார் அந்த ஆந்திர மாநிலம் பதிவெண் கொண்ட டாடா இண்டிகா காரை கைப்பற்றி விசாரித்ததில், அந்தக் கார் ஆந்திராவில் திருடப்பட்டது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தனிப்படை அமைத்து விசாரனை நடத்திவந்தார். இந்த நிலையில், அடுத்த செப்டம்பர் 16ஆம் தேதி ராணிபேட்டை மாவட்டத்தில் இதே பாணியில் கொள்ளை சம்பவம் நடந்தது. அதில் ஏ.டி.எம் மிஷினை உடைத்து நான்கு லட்சம் வரை திருடப்பட்டதும், தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. இதனால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், கொள்ளை சம்பவம் நடப்பதற்கு சற்று முன் ஒரே நபர் இரு ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுப்பது தெரியவந்தது. அவர்களது வங்கி கணக்கை வைத்து அவர்களது முழுவிவரமும் சேகரிக்கப்பட்டது. அதில் கொடுத்திருந்த செல்ஃபோன் என்னும் கொள்ளை சம்பவம் நடை பெற்ற தமிழ்நாடு பகுதியில் எங்கெங்கெல்லாம் சென்றது என்ற டவர் லொகேஷ்னையும் வைத்து விசாரனை நடத்தினர். கொள்ளையனின் செல்ஃபோன் சிக்னலை வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கொள்ளையர்கள் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லோடு லாரியில் பயணிக்கின்றனர் என்ற தகவலும், அவர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட், ஸ்ரீபெரும்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிக்கு லோடு இறக்க சென்ற தகவலும் கிடைத்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்தது.
காரணம் சில ஆண்டுகளுக்கு முன் பவாரியா கொள்ளை கும்பல் செய்த கொடூரங்கள் போலீசாரின் நினைவுக்கு வந்தன. இதனால் இவர்களைப் பிடிக்காவிட்டால் இந்தக் கொள்ளை கும்பலின் அட்டகாசம் தொடரும் என்பதால் தீவிரமாக காண்காணித்தனர். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஆரம்பாக்கம் அருகே வருவது தெரியவந்தது. எளாவூர் நவீன சோதனை சாவடியருகே கொள்ளையர்கள் நான்கு பேர் லாரியுடன் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்த போது அரியானா மாநிலம் மேவாத்ஜில்லா மாவட்டதை சேர்ந்த சாஜித், ஹர்சாத், லுக்மன் மற்றும் பதினாரு வயதுடைய சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
பவாரியா கொள்ளை கும்பளைப் போலவே லோடு லாரியில் ரகசிய அறை அமைத்து அதில் குற்ற சம்பவத்திற்க்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர், வெல்டிங் மெஷின் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. கொள்ளையடித்த மீதி பணத்தை அரியானாவில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.