
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி பகுதியில் சர்ச் நடத்தி வருபவர் பேராயர் நோவா பிரான்சிஸ். இவரது மனைவி செல்வராணி. சித்த மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மே 27 ஆம் தேதி நோவா பிரான்சிஸ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு, நோவா பிரான்சிஸ் கதவைத் திறந்துள்ளார். அப்போது 4 நபர்கள் நாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வந்துள்ளோம். உங்கள் செல்போனை கொடுங்கள் என்று கேட்டபடி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இன்னும் 4 நபர்கள் அடுத்தடுத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த நோவா அந்த நபர்களிடம் உங்களின் ஐடி கார்டை காண்பிக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த கும்பல், பாதிரியாரை அறைக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் பதறிப் போன அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கூச்சலிட்டனர். இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த கும்பல் சர்ச் எதிரே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதில் ஒருவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கியதில் அவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

போலி வருமான வரித்துறை அதிகாரிகள் குறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டதும் குடியாத்தம் நகர போலீசார் வந்து சிக்கிய அந்த நபரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38 ) என்பது தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய நபர்கள் குறித்து குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தியவர்கள், அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றவர்கள் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.