புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில், மீமிசல் சுற்றியுள்ள கிராமங்களில் கிடைகளில் அடைக்கப்படும் செம்மறி ஆடுகளை மர்ம கும்பல் மொத்தமாக திருடிச் செல்கிறது. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர்.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஆவணம் பெருங்குடி கிராமத்தில் ஆரோக்கியசாமி-மதலைமேரி தம்பதி தம்பியின் 34 செம்மறி ஆடுகள் காணாமல் போனது. இதேபோல கிளாரவயல் கிராமத்திலும் கிடையில் நின்ற ஆடுகள் காணாமல் போனது குறித்தும் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பேயாடிக்கோட்டை கிராமத்தின் வழியாக சென்ற ஒரு போலீசார் இரு இளைஞர்கள் தனியாக நிற்பதைப் பார்த்து விசாரிக்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரி்த்தபோது போலீசார் அழைத்து வந்தது கூட்டம் கூட்டமாக ஆடு திருடும் கும்பலை சேர்ந்த தஞ்சை மாவட்டம் முதுகாடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் சூர்யா (19), மற்றும் பழனிவேல் மகன் மோகன் (23). என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, 'நாங்கள் ஊர் ஊராகச் சென்று தனியாக உள்ள கிடைகளை பார்த்து ஆட்கள் இருக்கிறார்களா என்பதை கவனித்து ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ரமேஷ்க்கு தகவல் கொடுப்போம். ரமேஷ் சரத்பாபுவின் டாடா ஏஸ் வாகனத்தில் மேலும் சிலரோடு வந்துவிடுவார். கிடைகளிலிருந்து ஆடுகளை வெளியே ஓட்டி வந்து டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி ராமநாதபுரம் கொண்டு போய் விற்பனை செய்வோம். இதில் எங்களுக்கு துணையாக சுப்பையா உள்பட மேலும் சிலர் உள்ளனர்' என்று கூறியதுடன் திருடிச் சென்ற ஆடுகளையும் கொண்டு போய் காட்டியுள்ளனர். ஆடுகள், டாடா ஏஸ், பல்சர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்ததுடன் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.