திருச்சி வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், ஒரே நாளில் மாநகர் புறநகர் என சூறாவளியாக நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தே.மு.தி.க.வினரை உற்சாகப்படுத்தினார். மணப்பாறையில் உள்ள ஆண்டவர் கோவில் அருகே செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் ஏராளமானோர் அணிவகுந்து வந்தனர். ரவுண்டான அருகே கொடி ஏற்றி வைத்து தே.மு.தி.க. கல்வெட்டை திறந்து வைத்தார்.
திருச்சி மேலசிந்தாமணி, கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். அங்கே இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி 25 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். அடுத்து வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள கார்கில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குழந்தைகள் தினத்தை ஒட்டி தன்னை சந்திக்க வந்த பள்ளி குழந்தைகளுடன் விஜயபிரபாகரன் இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம பேசிய விஜயபிரபாகரன், தே.மு.தி.க. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. நான் பதவிக்காக அரசியலுக்காக வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன். இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். என் தந்தை கூறினால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் தந்தையிடம் கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.