நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மானிய விலை பொருட்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் வாங்காமல் இருந்தால் அவர்களுடைய குடும்ப அட்டை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏழை எளிய மக்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்காமல் இருப்பதற்கு உரிய காரணங்கள் இருக்கும் என்பதை மத்திய உணர வேண்டும். நியாய விலைக் கடைகளில் பயனாளிகள் அவர்களுக்குத் தேவையான பொருட்களையே அவர்களால் வாங்கப்படுமே தவிர, பயனாளிகளுக்குப் பயன்படாத பொருட்களைத் தொடர்ந்து மாதா மாதம் வாங்குவது அவசியமற்றது. 3 மாதங்கள் தொடர்ந்து நியாயவிலை பொருட்களை வாங்காவிடில் குடும்ப அட்டை ரத்து செய்வது என்பது ஏழை எளிய மக்களுக்குச் செய்யும் பெரும் அநீதியாகும்.
குடும்ப அட்டையை மக்கள் வெறும் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் அரசின் பல தேவைகளுக்கான ஆவணமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நியாயவிலை பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தொகையின், நிலுவைத் தொகையை வழங்காத மத்திய அரசு, குடும்ப அட்டை ரத்து செய்வதில் மட்டும் முனைப்புடன் செயல்படுவது ஏழை எளிய நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே, குடும்ப அட்டை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற்று மாநிலங்களில் பகுதி நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும் பல நியாயவிலைக் கடைகள் முழுநேர கடைகளாக மாற்றவும், மாநில அரசுகளுக்கு நியாயவிலை பொருட்கள் கொள்முதல் செய்ய வேண்டிய தொகையின் நிலுவையை உடனே வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.