மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் 150-இடங்களில் காந்தியின் அஞ்சல் தலை கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகராட்சி உயர் தொடக்கப்பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சிவசக்திவேல் தலைமை வகித்தார். தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற அருங்காட்சியகக் காப்பாட்சியர் ஜெ.ராஜாமுகம்மது, சமூக ஆர்வலர் செல்வா ஆகியோர் கலந்து கொண்டனர். அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் வை.ந.தினகரன் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளும் மகாத்மாக காந்தி படத்துடன் வெளியிட்ட 64 - அஞ்சல் தலைகளைக் காட்சிப்படுத்தியிருந்த நாணயவியல் கழகத் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி நம்நாட்டில் மகாத்மா காந்தி அவர்களை அறிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் மேலை நாடுகளில் அவரைப் பற்றி அறிந்தும் சிறப்புச் செய்தும் வைத்திருக்கிறார்கள்.
அதனால் நம் நாட்டில் மட்டுமல்லாது மேலை நாடுகளிலும் அவருக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளை ஏற்கனவே சேகரித்து வைத்திருந்தேன். என்னிடம் இதுவரை 64-வகையான அஞ்சல் தலைகள் உள்ளன. அண்ணல் காந்தியாரின் நினைவைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு பல இடங்களிலும் 150 - வது விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக என்னால் இயன்ற வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 150 இடங்களில் இந்த அஞ்சல்தலைகளை கண்காட்சியாக காட்சிப்படுத்தி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறேன். அதன் முதல் நிகழ்ச்சியாக இந்தப் பள்ளியில் துவங்கியிருக்கிறேன். இந்த ஆண்டுக்குள் புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்ற இடங்களிலும் நடத்த திட்டமிட்டிருக்கிறேன் என்றவர். மேலும் மற்ற மாவட்டங்களிலும் கண்காட்சி நடத்த பள்ளி கல்லூரிகள் கேட்டுக் கொண்டால் மாணவர்கள் மத்தியில் மகாத்மா காந்தி பற்றிய அஞ்சல் தலை கண்காட்சியை நடத்துவதுடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தவும் உள்ளேன் என்றார்.