கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த படித்த பட்டதாரி மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு யார் காரணம் என்கிற கேள்வி பலரையும் முனுமுனுக்கவைத்துள்ளது. அந்த மாணவன் பேசிய வீடியோவும் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் இனியவன். இவர் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
உலகத்தில் உள்ள எல்லா தமிழ் சொந்தங்களுக்கும் வணக்கம். விவசாயி தற்கொலையை சினிமாவில் பார்த்திருப்பீர்கள். விவசாய குடும்பத்தில் பிறந்த நான் தற்கொலை செய்யப்போவதை பார்க்கலாம். முதலில் என்னோட கஷ்டத்தை கேளுங்கள். அதற்கு பிறகு நீங்கள் இதனை எல்லோருக்கும் தள்ளிவிடுங்கள்.
நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு கிராமம். எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். கஜா புயல் பாதிப்பால் எங்க ஊரில் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். நிவாரணம் வேண்டும் என்று போராட்டம் பண்ணினோம். அப்டி போராட்டம் பண்ணியபோது சிந்தாமணி, சந்தான கிராமத்தில் உள்ளவர்கள் வீடு இல்லாமல் நடுரோட்டில் சமைத்து சாப்பிடும் சூழல் ஏற்பட்டது.
அப்படி சமைத்து சாப்பிடும்போது, எங்களது நிலைமையை சொல்லி நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது எஸ்.பி. வாகனம் வந்தது. என்ன ரோட்டுல சமைக்கிறீங்கன்னு சொல்லி அடிச்சி விரட்டினார்கள்.
முதல் அமைச்சர் வந்து சென்ற பிறகு 10, 20 நாள் கழித்து எல்லோரையும் கைது பண்ணும் சூழல் இருந்தது. வீடு விடாக புகுந்து கைது பண்ணினார்கள். இதுவரை யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை.
நான் படித்த பட்டதாரி மாணவன். ஜார்னலிசம் படிச்சிருக்கேன். இருப்பினும் விவசாயம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த முயற்சியில் விவசாயம் செய்தேன்.
கஜா புயலுக்கு போராடியதற்காக எங்களை தேடுகிறார்கள். ஊர் ஊராக அலைகிறோம். தீவிரவாதிகளைப்போல எங்களை தேடுகிறார்கள். என் வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டுவிட்டார்கள்.
நான் சாகப்போவதால் நான் கோழை கிடையாது. நான் சாவுவதால் என் ஊருக்கு நல்லது நடக்கட்டும். அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்துவிட்டார்கள். என்னுடைய சாவுக்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஊர் ஊரா ஒடுறேன். சாப்பிடவில்லை. எல்லோரும் இப்ப சிரிப்பிங்க. ஒரு நாள் சோத்துக்கு கஷ்டப்படுவீங்க. அப்ப தெரியும் எங்களோடு அருமை. டெல்டா மாவட்டம் முழுவதும் சேதமாயிடுச்சி. இனி அதனை உருவாக்குவது மிகவும் சிரமம். உருவாக்கிற எங்களையும் இப்படி பாடாய் படுத்துறீங்க.
குண்டாஸ் போடும் அளவுக்கு நாங்க என்னங்க தப்பு செய்தோம். எவ்வளவோ பேர் என்னென்னமோ பண்றாங்க. நாங்க போராட்டம் பண்ணி நிவாரணம் கேட்டதற்காக இப்படி பாடாய் படுத்துறீங்க.
எங்க கோரிக்கையை நிறைவேத்துங்க. எங்க அம்மா, எங்க குடும்பத்த பத்திரமா பாத்துக்குங்க. நன்றி வணக்கம். விவசாயம், சோத்துக்கு ஒரு நாள் கையேந்தி நிப்பீங்க. அன்னைக்கு என்னை நினைச்சு பாப்பீங்க.
எல்லாக்கும் வேதனையோடு ஒரு பதிவை போடுகிறேன். நான் பாய்சன் சாப்பிட்டுவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைவிட்டு பிரிந்துவிடுவேன். அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி. நாங்க என்னய்யா தப்பு செய்தோம். கஜா புயலில் எவ்வளவு கஷ்டப்பட்டோம். கூரை வீடு, மாடி வீடு வைத்திருந்த எல்லோரும் குளிரில் நின்றோம்.
காவல்துறை எங்கள் மீது பொய் வழக்கு போட்டு ரொம்ப கஷ்டப்படுத்துகிறார்கள். கஜா புயல் பற்றி டிவியில் வந்து பேட்டி எடுத்தார்கள். எடப்பாடி ஐய்யா என்று பேசினேன். பேசுவதற்கு கூட உரிமை இல்லையா? இப்படி கஷ்டப்படுத்துகிறார்கள். எங்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்கணும். எங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்கணும். எங்கள் ஊருக்கு நீதி கிடைக்கணும். எங்கள் ஊர் மக்கள் எல்லோரையும் விடுவிக்க வேண்டும். இதுதான் என்னுடைய சாவின் கோரிக்கை என உருக்கமாக பேசியுள்ளார்.
இனியவனின் தற்கொலை முயற்சி சம்பவம் முகநூலில் பரவியதையடுத்து, இனியவனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருவதோடு, இனியவனின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.