Skip to main content

விளை நிலங்களில் குழாய் பதிக்க கெயில் நிறுவனம் நோட்டிஸ் ஒட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு

Published on 17/03/2018 | Edited on 17/03/2018


 

gail-pipeline

 
விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டம் குறித்து ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகங்களிலும் எண்ணை நிறுவனம் சார்பில்  நோட்டிஸ் ஒட்டப்பட்டிருப்பது  விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்துடன் கூடிய கோபத்தை உண்டாக்கியுள்ளது. விரைவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
 

 நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களில் கடந்த 2013ம் ஆண்டு எண்ணை நிறுவனம் சார்பில் ’மாதானம் திட்டம்’ என்றகிற  பெயரில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து துரப்பன பணிகள் நடந்துவருகிறது.  அதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தின் மூலம் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.
 

 இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கூடுதலாக 7  கிணறுகளை அமைத்து நாள்தோறும் சுமார் 20 லாரிகளில்  கட்சா எண்ணை எடுத்துசெல்கின்றனர்.  இந்த கிணறுகளின் வாயிலாக ரசாயன கலவைகளை பூமிக்குள் செலுத்துவதால்  சுற்றியுள்ள  30 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள்  சாகுபடி செய்ய முடியாமல் பாலைவனம் போல கிடக்கிறது. குடிநீருக்காக மக்கள் அகதிகளை போல தேடி செல்லவேண்டிய நிலையும் உறுவாகிவிட்டது. 
 

இந்தநிலையில் பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் எண்ணை குழாய்களை அமைக்க திட்டமிட்டு அதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளது. 
 

 நிலத்தை கையகப்படுத்துவதற்கு தொடர்பான விவரங்களை கெயில் நிறுவன அதிகாரம் பெற்ற அலுவலர் கையொப்பம் இட்ட நோட்டீஸ் பொதுமக்கள் பார்வையில் படும்படி  ஒவொரு கிராம நிர்வாக அலுவலங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட  பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி கிராம விவசாயிகளிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

gail-pipeline

     
வேட்டங்குடியை சேர்ந்த நஞ்சை, புன்செய் விவசாய சங்க    தலைவர் வில்வநாதன் கூறுகையில்,’’ பழையபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணைய் நிறுவனம்  வேட்டங்குடி கிராமத்தில் இருவக்கொல்லை என்ற இடத்தில் எண்ணை கிணறுகள் அமைத்துள்ளது. அந்த கிணறால் அந்த பகுதி விளைநிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன. தற்போது, பழையபாளையத்திலிருந்து விவசாய விளைநிலங்களின் வழியாக தரங்கம்பாடிக்கு எடுத்து செல்லும் வகையில் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டு, அதனை கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நோட்டிஸாக ’நிலம் கையகப்படுத்தப்படும்’ என்று நோட்டீஸாக ஒட்டியுள்ளனர். விளைநிலங்களை கெயில் நிறுவனம் கையகப்படுத்த நினைத்தால் பொதுமக்கள் விவசாயிகள் என ஒன்று திரண்டு தொடர் போராட்டம் நடத்துவோம், அதற்கான வேளைகளில் ஈடுபட்டுவருகிறோம்.’ என்றார்.
 

’’ஆட்டை கடித்து, பிறகு மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்தக்கதை என கிராமத்தில் பழமொழி உண்டு. அது போல கதையாகத்தான் ஒ.என்.ஜி.சியின் கதையும் இருக்கிறது. முதலில் மாதானம் திட்டம் துவங்கும் போது 7 கிணறுகள் மட்டும் தான். அதற்கு மேல் இல்லை என்றனர். அதோடு எடுக்கும் எண்ணைகளை லாரிகள் மூலம் எடுத்து செல்வோம், விளைநிலங்களில் குழாய் பதிக்கமாட்டோம் என்றனர். ஆனால் இன்று புதிய கிணறுகள் அமைப்பதோடு, நிலங்களுக்கு அடியிலும் குழாய் பதிக்கதுவங்கிவிட்டது.’’ என்கிறார் பெரியார் திராவிடர் கழக மா,செ. பெரியார் செல்வம்.
 

க.செல்வகுமார்.

 

சார்ந்த செய்திகள்