திருச்சி லால்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லையில் உள்ள மளிகை கடை, சிறிய அளவிலான பெட்டிக் கடைகள் போன்றவற்றில் தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக கல்லா கட்டுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தளா்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அரசும் ஊரடங்கு வரை மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது.
இது மதுப்பிரியா்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொரு பக்கம் எப்படியும் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை அவா்களுக்கு உண்டு. அதை உறுதிபடுத்தும் விதமாக, லால்குடி பகுதிகளில் உள்ள மளிகைக் கடை, சிறிய அளவிலான பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றில், 125 ரூபாய் மது பாட்டில், 250க்கும், 250 ரூபாய் பாட்டில் 500 ரூபாய்க்கும், ஹான்ஸ் பாக்கெட் 80 ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுமூலம் காவலர்களுக்கு கமிஷனும் தனியாக போவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் கூட மதுபாட்டில்கள் பிடிபட்டாலும், முன்பைவிட தற்போது மிக பாதுகாப்பாக இந்த விற்பனை கலைகட்டியுள்ளது. மளிகைக் கடைகள் பாதிக்கடையைத் திறந்துவைத்துகொண்டு, விற்பனையைக் காலை முதலே துவங்கி இரவுவரை செய்துவருகின்றனர். அதிலும் கிராமப்புற பகுதிகள் என்பதால், அதிகாரிகள் யாரும் ஆய்வுசெய்ய வரப்போவதில்லை என்ற மனநிலையுடன் மது விற்பனை நடந்துவருகிறது.