மதுரை மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் மற்றும் பரவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், பால் மற்றும் மருந்து பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நடந்து சென்று வாங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகருக்குள் பேருந்துகள் இயக்கப்பட அனுமதியில்லை என்பதால், பிற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் மதுரை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.