தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் டிசம்பர் 4 ஆம் தேதி இலவச திருமணங்கள் நடைபெறவுள்ளன.
ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான செலவுகளையும் திருக்கோயில்கள் நிர்வாகமே ஏற்கும் என, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் 500 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் திருமணங்கள் நடைபெறவுள்ளன.
சென்னை இணைய ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்டோருக்கான திருமண நிகழ்வு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இதில் அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களும், மணவிழாவில் பங்கேற்கும் உறவினர்கள் சுமார் 500 பேருக்கு முதல்நாள் இரவும் மணநாளன்று காலையிலும் சிற்றுண்டியும், திருமணத்துக்குப் பின்னர் பகல் உணவும் வழங்கப்படவுள்ளது.