மோசடி; இரு கூட்டுறவு சங்க பணியாளர்கள் சஸ்பென்ட்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகிலுள்ள பூசாரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திலும், குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் விவசாய கடன்கள் மற்றும் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்தது.
இதுகுறித்து ஓமலூர் வட்ட கூட்டுறவு துணை பதிவாளர் தமிழ்நங்கை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், இந்த இரு கூட்டுறவு சங்கங்களிலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, 100-சதவீத தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை அதிகாரியாக கூட்டுறவு சார்பதிவாளர் துரைசாமி நியமிக்கப்பட்டார்.
அதில், இரு சங்கங்களிலும் இருந்த பணியாளர்கள் நகைக்கடன் பெற்ற விவசாயிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, நகைகளை அவர்களிடமே வழங்கிவிட்டு, அவர்கள் செலுத்திய பணத்தை சங்கத்துக்கு கணக்கில் வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, பூசாரிப்பட்டி கடன் சங்க செயலாளர் வள்ளியண்ணன், துணை செயலாளர் தங்கராஜ், நகை மதிப்பீட்டாளர் அமுதா மற்றும் குண்டுக்கல் கடன் சங்க செயலாளர் பழனிசாமி, துணை செயலாளர் பெரியசாமி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு, காசாளர் இரகுமணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில், மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என்பது குறித்து , விசாரணை நடபெற்று வருகிறது.
சிவசுப்பிரமணியம்