ஆறு இளம்பெண்களைத் திருமணம் செய்து கிடைக்கும் பணத்தைப் பங்குபோடும் வியாபாரத் திருமணக் கும்பலை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள் நெல்லை மாநகர தனிப்படை. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி. காலனியைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவர் பேராசிரியராக வேலைபார்த்து ஒய்வுபெற்றவர். இவரது மகளான விஜிலாராணிக்கும் (33) தூத்துக்குடி மாவட்டத்தின் சாயர்புரம் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ள வின்சென்ட் பாஸ்கருக்கும் (40) கடந்த ஆண்டு முக்கிய உறவினர்கள் முன்னிலையில் பாளை பெருமாள்புரம் சர்ச்சில் திருமணமாகியிருக்கிறது. வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டினருக்கு 40 பவுன் தங்க நகைகள் 3 லட்சம் ரொக்கம் என அள்ளிக்கொடுத்திருக்கிறார் பேராசிரியர் ஜோசப்ராஜ். தம்பதியர் சாயர்புரத்தில் குடியேறினர்.
இரண்டு மாதத்திற்குப் பின்பு மனைவி விஜிலாராணியிடம் தனியாக வியாபாரம் செய்யப் பணம் வேண்டுமென்றும் அடமானம் வைக்க அவளின் நகைகளைக் கேட்க, கணவரிடம் 40 பவுன் நகையைக் கொடுத்திருக்கிறார் விஜிலாராணி. இதையடுத்து, நகையுடன் வின்சென்ட் பாஸ்கர் தலைமறைவானார். பதறிய விஜிலாராணி தன் பெற்றோர் வீட்டிற்கு நடந்ததைச் சொல்ல, அவர்கள் வின்சென்ட் பாஸ்கரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து விஜிலாராணி நெல்லை கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் கொடுக்க, அதைனையடுத்து போலீஸ் துணைக் கமிஷனரான சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி கயத்தாறில் 4வது மனைவியுடன் வசித்துவந்த வின்சென்ட் பாஸ்கரின் செட்டப் தாயான சாத்தான்குளம் சியோன் மலையைச் சேர்ந்த பிளாரன்ஸ், சித்தியாக நடித்த தாமரைச்செல்வி ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் வின்சென்ட் பாஸ்கர் பல பெண்களைத் திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்தது தெரியவந்திருக்கிறது. கரோனா தடை காலத்தைப் பயன்படுத்தி திசையன்விளைப் புரோக்கர் இன்பராஜ் மற்றும் வின்சென்ட் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு விஜிலாராணியை ஏமாற்றித் திருமணம் செய்து, அதில் வரதட்சணையாக கிடைத்த நகை, பணத்தைப் பங்கு போட்டது தெரியவந்திருக்கிறது. புரோக்கர் இன்பராஜ் மூலமாக செட்டப் தாய், செட்டப் சித்தியைக் கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளில் 6 திருமணங்களைச் செய்த கல்யாண களவாணி மன்னனின் விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. கிடைத்த பணத்தில் தாயாக நடித்தவருக்கு 15 ஆயிரம், செட்டப் சித்திக்கு 10 ஆயிரம், கல்யாண மன்னனும், புரோக்கரும் மீதமுள்ளவற்றைப் பங்கு போட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, “மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். ஆரம்பத்தில் சாயர்புரம் பணகுடி பகுதியின் திருமணமாகி குழந்தையுடனிருந்த இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வின்சென்ட் பாஸ்கர் பணத்துடன் தலைமறைவானார். அடுத்து களக்காடு, கீழகாடுவெட்டியில் இரண்டு பெண்கள், தூத்துக்குடியில் 5வது, விஜிலாராணியை 6வதாக திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்குத் திட்டமிட்ட புரோக்கர் இன்பராஜை தேடிவருகிறோம்.” என்றார்.
இப்படியும் திருமணக் கொள்ளையா? கண்ணைக் கட்டுது சாமியோவ்...!!