கோவை மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த நகலை வெளியிடக்கோரி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் முன்னாள் மண்டல தலைவருமான பத்மநாபன் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய பிரான்சை சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த நகலை வெளியிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனை நேரில் சந்தித்து இன்றுமனு அளித்தார் .ஆனால் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நகலை வெளியிட மறுத்ததுடன் ஆணையர் விஜய கார்த்திகேயன் முறையற்ற ரீதியில் பதிலளித்ததாகவும் கூறி தனிநபராக பத்மநாபன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தனிநபராக அமர்ந்து இந்த போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர் பத்மநாபனை போராட்டத்தை கைவிடும்படி உக்கடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.ஆனால் ஒப்பந்த நகலை மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும் எனவும், அது வரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை தொடர போவதாக பத்மநாபன் தெரிவித்தார். இதனையடுத்து முன்னாள் கவுன்சிலர் பத்மநாபனை காவல் துறையினர் கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட பத்மநாபன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் என்பதும் இவர் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் மண்டல தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.