நபிகள் நாயகத்தின் கேலி சித்திரம் வெளியிடுவதை கைவிட போவதில்லை என பிரான்ஸ் அதிபர் பேசியதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழகத்தினரும் மனிதநேய மக்கள் கட்சியினரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் படங்ளை சாலையில் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரான்சின் சார்லி ஹெப்டோ என்கிற பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகம் குறித்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்தார் பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஒருவர். அவரது தலையை மர்மநபர்கள் துண்டித்து கொடூரமாக கொலை செய்யதனர். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்லாம் மதத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது என குறிப்பிட்டார்.
இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு பதிலடியாக ஈரானை சேர்ந்த பத்திரிகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேலை அரக்கனாக சித்தரித்து கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டது. அதேநேரத்தில் கேலிசித்திரம் வெளியிடும் கருத்து சுதந்திரத்தில் இருந்த பிரான்ஸ் பின்வாங்கப் போவதில்லை என உறுதியாக கூறியிருந்தார். இந்த விவகாரமே தற்போது பூதாகரமாக மாறிவருகிறது.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் பிரான்ஸ் அதிபர் இமானுவேலை கண்டித்து அவரது படங்ளை தார் சாலையில் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒட்டபட்டிருந்த படங்கள் மீது வாகனங்கள் சென்று, பஞ்சு பஞ்சாக பிய்ந்து வருவது என்ன விவகாரம் என பொதுமக்களின் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.