மேக் அப் செய்வதற்காக அழகு நிலையத்திற்குச் சென்ற பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மற்றும் உடந்தையாக இருந்த நால்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது சிவகங்கை மாவட்ட காவல்துறை.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. டாக்சி டிரைவராகப் பணியாற்றும் இவருடைய மகள் அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), காரைக்குடியிலுள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில மீடியத்தில் +1 வணிகவியல் பயின்றுவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதியன்று, பள்ளிக்குச் செல்வதாகக் கூறி பள்ளிவரை சென்று, அங்கிருந்து விக்னேஷ் என்பவரின் காரில் ஏறிச் சென்று, பின் மாலை வேளையில் பள்ளிக்குத் திரும்பியதாக பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த பள்ளி நிர்வாகம் தந்தையையும், மாணவியையும் வரவழைத்து நடந்து என்ன? என்று விசாரித்து அந்த மாணவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாணவியையும் வகுப்பாசிரியை ஒருவரையும் பள்ளியைவிட்டு நீக்கியது.
இந்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளியான நிலையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணையைத் துவக்கினார். இதில், "பள்ளி மாணவி தன்னுடைய வகுப்புத் தோழி மூலமாக அறிமுகமான அழகு நிலையத்திற்கு தன்னுடைய தோழியுடன் கண் புருவம் திருத்துவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அழகு நிலைய பொறுப்பாளருடன் நட்புரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கைச் சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், காரைக்குடியைச் சேர்ந்த லெட்சுமி மற்றும் ஒரு நபர் ஆகிய நால்வர் மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றது மாவட்ட காவல்துறை. அத்துடன் கூடுதலாக, "மிகைப்படுத்தப்பட்ட, நடக்காத நிகழ்வுகளை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களிலோ அல்லது குறுஞ்செய்திகளிலோ வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் இளஞ்சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவிவருகிறது.