கோவை மாநகரில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்ட1460 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வடமாநிலத்தவர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.
கோவை மாநகரில் சராசரியாக தினமும் 10 இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை குறைந்த அளவில் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யும் நபர்களை பிடிக்க எண்ணிய போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், நான்கு வட மாநிலத்தவர்கள் குட்கா பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று அந்த வீட்டுக்கு சென்ற போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த வட மாநிலத்தவர்கள் வாகாராம், ஓம்பிரகாஷ், பரத் பட்டேல், ஹம்ரா ராம் ஆகிய 4 பேர் கைது செய்த போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1460 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் நான்கு பேரும் பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து கோவையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்ததும்,அவர்கள் மீது ஏற்கனவே பல குட்கா வழக்குகள் நிலுவையில் இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.