'ஜக்கம்மா சொல்லுறா... 'ஜக்கம்மா சொல்லுறா... நல்லது நடக்கனும்னா உதய சூரியனுக்கு ஓட்டுப்போடுங்க... எனக் கூறும் குடுகுடுப்பைக்காரரின் வீடியோ இணையத்தில் வைரலாக வலம்வருகிறது.
அதிகாலைப் பொழுதில், வாசலில் தண்ணி தெளித்து கோலம் போடும்போது, வீட்டுக்கு வரும் குடுகுடுப்பைக்காரர் ஒருவர், திமுக வேட்பாளருக்கும் கூட்டணிக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கும் ஆதரவாக பரப்புரை செய்துவந்தார். இதைக் கண்ட பொதுமக்கள், அவரை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். இன்னும் சிலர், அவரை ஆர்வத்துடன் மொபைலில் படம் பிடித்தனர். கோர்வையாகப் பேசி வாக்கு சேகரிக்கும் அக்குடுகுடுப்பைகாரரிடம் சில பெண்கள், தங்கள் குடும்ப கஷ்டத்தைச் சொல்லி, குறி கேட்கின்றனர். அவர், ”நல்லது நடக்கணும்னா திமுகவுக்கு ஒட்டு போடுங்க” எனச் சொல்லிவிட்டு செல்கிறார்.
திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராகவும், குடுகுடுப்பை தொழில் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவருமான சேலத்தைச் சேர்ந்த கோவிந்தன், கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் அவரது பாரம்பரிய தொழிலான குடுகுடுப்பை அடித்து வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்துவருகிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதல்முறையாக சாமக்கோடங்கி அலங்காரத்துடன் வாக்கு சேகரிக்க ஆரம்பித்த இவர், அதன்பிறகு நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இதே பாணியை கையாண்டு வருகிறார். இதனால், ஆங்காங்கே எதிர்க்கட்சியினரின் கோபத்துக்கும் கோவிந்தன் ஆளாகிறார். ஆனால், கோவிந்தன், குடுகுடுப்பை தொழில் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் பரப்புரையை எதிர்க்கட்சியினரால், வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.