"எனக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும் மக்களுக்காக பேசுவதை, எழுதுவதை, போராடுவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்." என பத்திரிகையாளர் மத்தியில் சூளுரைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம், 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, "வழக்குப் பற்றி வாய் திறக்கக்கூடாது.!" என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுப்பட்டவுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று (08.12.2019) வருகை புரிந்தார்.
காரைக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர்., "இன்று நடப்பது தர்ம யுத்தம்.! ஏழு மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற அரசு நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்று இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. நாள்தோறும் சமூக அநீதி, வன்கொடுமை கற்பழிப்பு கொள்ளை இவை அதிகரித்து வருவது தான் வளர்ச்சியாக வைத்திருக்கின்றது அந்த அரசு.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த அரசு என்ன சொல்கிறதோ, அதனையே அனைவரும் செய்ய வேண்டும். அதனை யாராவது எதிர்த்து குரல் கொடுத்தாலோ, சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்துகள் பதிவு செய்தாலோ அவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்படுவார்கள். ஆதலால் எல்லா வகையிலும் வாழ்வதற்கே அச்சமாக உள்ளனர். இது பெரிய தொழில் அதிபர்கள், சாதாரண தொழில் செய்பவர்கள் வரை அச்சம் உள்ளது. அவர்கள் விரும்புவதை தான் சாப்பிடுவதை தான் சாப்பிட வேண்டும்.
அவர்கள் பேசும் மொழி தான் தேசத்தில் பேச வேண்டும். இப்படி சர்வாதிகார பார்வையில் தான் நாடு செல்வதால் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதனை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்? மக்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எதிர்த்து பேசுவேன்! எழுதுவேன்! போராடுவேன்." என்றவரர் தொடர்ந்து., "அதிகார மையங்கள் துணிவோடு தங்களது கருத்தை சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசு நெறிப்படும். இன்று நாடு போகும் பாதை தவறான பாதை, மாற்றுப் பாதையில் போக வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வருவார்கள்.
வெங்காயம் சாப்பிடுவார்கள் எல்லாம் உயர்ந்த மனிதர்கள் அல்ல. உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் நிலைப்பாடு இன்று மாலையில் அறிவிப்பு வெளியாகும்." என்றார் அவர். இதற்கு முன்னதாக சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த ப.சிதம்பரத்தை சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான திருமயத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.