பங்காளி பகையாளியாவதும், பகையாளி உறவாவதும் தேர்தலின் பொழுது நடைபெறும் வழக்கமான நிகழ்வுதான் அதில் ப.சிதம்பரம் மட்டும் விதிவிலக்கா என்ன?. ப.சி.யால் இரண்டு தடவை எம்.எல்.ஏவான ஒருவர் ப.சி.க்கு எதிராகவும், சொந்த கட்சிக்கு எதிராகவும் வாக்கு சேகரித்து வருவது தான் காங்கிரஸார் மத்தியில் நிலவும் கலட்டாவே...
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. பர்மா காலனி, என்.ஜி.ஓ.காலனி, வைரவபுரம், நெசவாளர் காலனி, சங்கந்திடல் உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் ஏறக்குறைய 13 ஆயிரம் வீடுகளும், 23 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர். இதற்கு முன்பு 10 வருடங்களாக சங்கராபுரம் ஊராட்சியின் தலைவராக இருந்தவர் காங்கிரஸை சேர்ந்த மாங்குடி என்பவர். இந்தமுறை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலைவர் பதவி பெண்ணுக்கு என மாறிய நிலையில், காங்கிரஸார் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஒத்துக்கொண்ட நிலையில் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடியின் மனைவி தேவி இந்த முறை ஊராட்சிக்கான தலைவர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவ்வேளையில், ப.சி.யின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்தின் ஆதரவில் கல்லூரி தாளாளர் அய்யப்பனின் மனைவி பிரியதர்ஷினி போட்டி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ப.சி. மற்றும் கட்சியினரின் ஆதரவு தேவி மாங்குடிக்கு இருக்கும் பட்சத்தில், கட்சிக்காரரும், ப.சி.யின் ஆதரவாளருமான முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்தின் ஆதரவு போட்டி வேட்பாளருக்கா..? என காங்கிரஸார் மத்தியில் வழக்கம்போல் குழப்பமும், கண்டனமும் ஒரு சேர நிலவியது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரமோ, கட்சிக்கு விரோதமாக போட்டி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்க ஆரம்பித்தார். இது மேலும் பிரச்சனையை ஏற்படுத்த விவகாரமோ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு செல்ல, அவர்களோ, " இவ்விவகாரத்தை தொகுதியின் எம்.எல்.ஏவான கே.ஆர்.ராமசாமி பார்த்துக்கொள்வார்." என ஒதுங்கி கொண்டது. எனினும் முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரமோ அவருடைய நிலைப்பாட்டை மாற்றவில்லை. விவகாரம் முற்றுவதைக் கண்ட ப.சி.யோ சனிக்கிழமையன்று சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் தேவிமாங்குடிக்காக காரைக்குடி என்.ஜி.ஓ.காலணி, பர்மா காலணி மற்றும் அமராவதிபுதூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமையன்று ப.சி. எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் சென்று போட்டியாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தது முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம் தரப்பு.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய முன்னாள் எம்.எல்.ஏ.வை பதவி நீக்கம் செய்யவேண்டுமென உள்ளூர் காங்கிரஸார் போர்க்கொடி தூக்கி தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றாலும், ப.சிதம்பரத்தால் 1996ம் ஆண்டு ஒரு முறையும், 2006ம் ஆண்டு மறுமுறையும் எம்.எல்.ஏ-வான சுந்தரத்தின் எதிர் நடவடிக்கைகளால் துவண்டுள்ளனர் காங்கிரஸார். இதனால் காங்கிரஸார் மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.