கரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில், இன்றுமுதல் (10.05.2021) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபான கடைகளை முழுமையாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒரு சிலர் அரசு மதுபான கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி, பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றனா்.
இந்நிலையில், திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த மனோகரன் (47) என்பவா் தன்னுடைய வீட்டில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, திருச்சி மாநகர காவல்துறை ஆணையருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, தனிப்படை காவல்துறையினா் மூலம் அவருடைய வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டனர்.
அதன்பேரில், காவல்துறையினா் சோதனை மேற்கொண்டபோது 480 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். மனோகரன் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், அவா் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி என்பதும், கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.