கடலூர் நகர அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் கந்தன். இவர் கடலூர் நகராட்சியில் 36-ஆவது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். கட்சிப் பணியில் 30 வருடங்களாக இருந்துவரும் கந்தன் மனைவி 1996-ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலும், அதைத் தொடர்ந்து 2001லிருந்து 2006 வரையிலும் 36-ஆவது வார்டு கவுன்சிலராக இருந்தார். பின்னர் 2006 முதல் 2016 வரை கந்தன் நேரடியாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர், கடலூர் நகர துணைச் செயலாளராகவும், நகர அம்மா பேரவை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இதுமட்டுமின்றி கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது மாவட்ட திட்டக் குழு உறுப்பினராகவும், தற்போது கடலூர் மாவட்ட நிலவள வங்கியின் இயக்குனராகவும் உள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் நெருங்கிய ஆதரவாளர். ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் அமைச்சருக்கு அருகாமையில் உடன் இருப்பவர்களில் ஒருவர் கந்தன். ஆனாலும், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சம்பத் தோல்வியடைந்ததற்கு கந்தனும் காரணம் என்றும், சம்பத்தை ஏமாற்றி விட்டதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடலூர் அடுத்த அழகர்கோவில் தென்னம்பாக்கம் அய்யனாரப்பன் சுவாமி முன் நின்று கொண்டு கந்தன், "தென்னம்பாக்கம் அய்யனார் சாமி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவர்கிட்ட தவறா சத்தியம் பண்ணங்களுக்கு, தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுப்பவர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் அண்ணன் போட்டியிட்டார். எனக்கு இந்த தேர்தல்ல ஒதுக்கப்பட்ட ஓ.டி மற்றும் 13 வார்டுகள்லயும், காலனி பகுதிகள்லயும் நான் உண்மையா வேலை செஞ்சேன். அவர் கொடுத்த பொருள்களையோ, மத்தவைகளயோ முறையாக கொண்டு போய் சேர்த்தேன். அதே மாதிரி, கடந்த 10 ஆண்டு காலமாக என்னை பிள்ளைக்கு பிள்ளையா... தம்பிக்கு தம்பியா... அவங்க குடும்பத்துல என்ன பார்த்துக்கிட்டாங்க.
இந்த நிமிஷம் வரைக்கும் நான் அந்த குடும்பத்துக்கோ, அவருக்கோ, கட்சிக்கோ எந்த துரோகமும் பண்ணல. ஆனா அவருகூட இருந்த பல பேர் நடிச்சுக்கிட்டு, அவரை ஏமாற்றி பழி வாங்கிட்டாங்க. அப்படி கூட இருந்து நடித்து ஏமாற்றியவர்கள் யார் யார் என்று அவருக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றைக்கும் சம்பத் அண்ணன் குடும்பத்திற்கு நான் உறுதுணையாக இருப்பேன். இது அய்யனார் மேல ஆணை. நான் அவருக்கு துரோகம் பண்ணவும் இல்லை, காட்டி கொடுக்கவும் இல்லை. அவர் கொடுத்த வேலையை நான் ஒழுங்கா செஞ்சேன். அவரு காசு ஒரு ரூபாய் நான் சாப்பிடல. அப்படி அவரரையோ, கட்சியையோ காட்டிக் கொடுத்திருந்தா இந்த அய்யனார் எனக்கு தண்டனை கொடுக்கட்டும். அதே மாதிரி 10 ஆண்டுகாலமாக கட்சிக்கு உழைத்த அவரை காட்டிக் கொடுத்தவர்களை, அவருக்கு துரோகம் செய்தவர்களை, இரட்டை இலை சின்னத்த்துக்கு துரோகம் செய்தவர்களை இந்த அய்யனார் காட்டிக்கொடுக்கனும், பழி வாங்கணும். சம்பத் அண்ணன் இந்த அய்யனார் கோவிலுக்கு நிறைய செஞ்சிருக்காரு, சக்தி உள்ள ஐயனார்னா அவரை பழிவாங்கினவங்கள உள்ளாட்சி தேர்தலுக்குள்ள காட்டிக் கொடுத்து அவங்கள பழி வாங்கணும், வாங்குவாரு" என்று சத்தியம் செய்து ஒரு வீடியோ ஒன்றை பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக வந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து கந்தனிடம் கேட்டதற்கு, "நான் அமைச்சரின் தீவிர விசுவாசி. நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. 30 வருடங்களாக கட்சியில் இருக்கிறேன். அ.தி.மு.க வெற்றி பெற அனைத்து வகையிலும் பாடுபட்டேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அமைச்சருக்கு (சம்பத்) எதிராக செயல்படவில்லை. அமைச்சருக்கு தேர்தலில் விசுவாசமாக செயல்பட்டேன். வேண்டுமென்று சிலர் என் மீது அவதூறு பரப்பும் வகையில் சில அ.தி.மு.கவினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அதனால் தான் அய்யனார் முன்பாக உண்மையை வெளிப்படுத்தினேன்" என தெரிவித்தார்.