கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த மணிகண்டன் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் மீது காவல்நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை காவல்துறையினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மணிகண்டனைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பெங்களூரு பண்ணை வீட்டில் இருந்த மணிகண்டனை தனிப்படை காவல்துறையினர் இன்று (20/06/2021) அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர், அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை செய்தனர். அதைத் தொடர்ந்து, அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டனிடம் இரண்டு மணி நேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவியதாக கைதான பிரவீன், இளங்கோ ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன் மணிகண்டனை ஆஜர்படுத்த உள்ளது காவல்துறை.