இந்திய நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக விடுதலை வேண்டி போராடிய பல தலைவர்கள் வயது மூப்பு காரணமாக மறைந்துவிட்டார்கள். அந்த விடுதலைப் போராட்டத்தில் எஞ்சி நிற்கும் கம்பீர போராளி என்றால் தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தான்...!
விடுதலைப் போராட்டத்திற்கு பிறகும் ஆட்சியாளர்களை எதிர்த்து, மக்கள் விரோதிகளை எதிர்த்துக் களத்தில் நின்று ஏழை எளிய மக்களுக்காக, தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் என்றுமே சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்தி வருபவர் நல்லகண்ணு.
இந்த கரோனா வைரஸ் காலத்திலும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இப்போது 96 வயது ஆகிறது. இந்த நிலையில் நேற்று (20/08/2020) இரவு திடீரென்று அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது உடனே அவர், அருகே வசிக்கும் தனது பேரனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு அந்த நள்ளிரவிலேயே அவரை அழைத்துக்கொண்டு சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அட்மிட் செய்தார் அவர் பேரன்.
இந்தத் தகவல் தெரியவர, கட்சி கடந்தும் நல்லகண்ணுவை மதிக்கக்கூடிய அனைத்துக்கட்சி தலைவர்களும் கவலையுற்றனர்.
இந்நிலையில், இன்று காலை அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. பிற்பகலில் அந்தப் பரிசோதனை முடிவு வந்தபோது அவருக்கு எந்தத் தொற்றும் இல்லை என்று தெரிந்தது. இந்தச் செய்தி அவரது கட்சி தொண்டர்கள் உட்பட தமிழக மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனைகள் செய்துவருகிறார். இன்று பகலுக்கு மேல் அவருக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. லேசாக சளி இருப்பதால் இன்னும் ஓரிரு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டியது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.