சேலத்தில் பார்மலின் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட் மொத்த வியாபார கடைகளில் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. புகாரின் பேரில் மார்க்கெட் பகுதிக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஆய்வகத்தில் இறந்த உடல்களைப் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளான பார்மலின் கலந்த மீன்களை சாப்பிடுவதால் உடலுக்கு கேடு என்று பலமுறை எச்சரித்தும் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. 'சேலம் ஃபிஷ் மார்க்கெட்' என்ற மொத்த வியாபார கடையில் பார்மலின் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பார்மலின் கலந்த மீன்கள் மட்டுமல்லாது மீன்களைப் பதப்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளிலும் பார்மலினை கலந்து அதன் மூலம் மீன்களைப் பதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.