கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதான மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கெனவே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராப்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.