தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி அந்த தோட்டத்தில் சிக்கிய இரண்டு வயது சிறுத்தை புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வனப்பாதுகாப்பு அலுவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய அந்த சிறுத்தை புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது.
இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்கு தற்காலிக கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், ‘நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிக கிடை அமைத்தவரை கைது செய்வதா?' என கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் வனத்துறை தங்களை காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி ஓ.பி.ரவீந்திரநாத்தின் நிலத்தின் மேலாளர்கள் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தோட்டத்தின் உரிமையாளரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் உள்ளிட்ட மூன்று பேருக்கு வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ரவீந்திரநாத்தை விசாரிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத்தை விசாரிக்க அனுமதி வேண்டும் என மக்களவை சபாநாயகரிடம் மாவட்ட வன அதிகாரி சமிரதா அனுமதி கோரியிருந்தார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் தோட்டத்தின் மேலும் 2 உரிமையாளர்கள் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகிய மூன்று பேருக்கும் வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி அல்லது சம்மன் கிடைக்கப்பட்ட இரண்டு வாரங்களில் மூவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.