Skip to main content

உஷாரய்யா உஷாரு... தொழிலதிபர்களை குறிவைக்கும் வெளிமாநில கும்பல்!

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Foreign gangs exchange fake jewelry with businessman

 

தென்காசி மாவட்டத்தின் சிவகிரி நகரின் ரதவீதிப் பக்கம் பெரிய மளிகைக் கடை வைத்திருப்பவர் ஒருவரிடம் கடந்த ஒரு வாரமாக இரண்டு பேர் தொடர்ந்து நாணயமாக பொருட்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

 

அந்த வகையில் சற்று பழக்கம் ஏற்பட்ட உடன் கடை அதிபரிடம் சைலண்ட்டாகப் பேச்சுக் கொடுத்த அந்த இருவரும், தாங்கள் அருகிலுள்ள ராஜபாளையம் பக்கமுள்ள செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை பார்ப்பதாகவும், சூளை அருகே மண் தோண்டும் போது புதையல் கிடைத்ததாகவும் அதில் சுமார் ஒரு கிலோ அளவுள்ள தங்க நகைகள் கிடைத்ததாகவும் அதனை 5 லட்சத்திற்கு விற்க உள்ளதாகவும் சொன்னவர்கள் சாம்பிளாக ஒரு கிராம் தங்க நகையைக் கொடுத்துள்ளனர். அவர்களின் பேச்சு, உடல் மொழியில் சந்தேகப்பட்ட மளிகைக் கடை அதிபர் அவர்களிடம் பக்குவமாகப் பேசியவர் அவர்களை தன் உறவினர் தங்கராஜிடம் அனுப்பியுள்ளார்.

 

அவரிடமும் இவர்கள் அப்படியே சொல்ல சந்தேகப்பட்ட தங்கராஜ், ரகசியமாக அடுத்த அறைக்குச் சென்றவர் இது குறித்து சிவகிரி காவல் துறையினரிடம் விஷயத்தைத் தெரிவிக்க இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தனிப்படை எஸ்.ஐ.சஜூவ் உள்ளிட்ட போலீஸ் டீம் அந்த இருவரையும் வளைத்து தங்கள் லெவலில் விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில் அந்த இருவரும் குஜராத் மாநிலம் டக்கர் நகரைச் சேர்ந்த பிரபுலால் மகன் கிசன், (42) மற்றும் நாராயணன் மகன் சுனில் (42) என்பதும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவைகள் போலியான நகைள் என்றும் மோசடிக்காகவே உருவாக்கப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

 

குஜராத்திலிருந்து கும்பலாகக் கிளம்பிய இந்தக் கூட்டம் தென் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ரயில்வே நிலையக் காட்டுப் பகுதிகளில் டெண்ட் போட்டுத் தங்கிக் கொள்வார்கள். பகலில் கம்பளி போர்வையும், கொசு வலையும் விற்க வந்ததாகக் காட்டிக் கொண்டு நகரிலுள்ள பெரிய தனவந்தர்கள், கடைக்காரர்களைக் குறிவைத்து இரண்டு மூன்று நாள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல ஆசை வலையை விரிப்பார்கள். புதையல் நகை என்றும் மொத்தக் கொள்முதல், சல்லிசான விலை என்றும் இடத்திற்கு ஏற்றபடி பேச்சைப் போடுவார்கள்.

 

தங்க நகை என்று கூறிக் கொண்டு சல்லிசான விலை என ஒரு சில லட்சங்களை வாங்கிவிடும் இவர்கள் மறு நாள் அந்தப் பகுதியையே காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு நகர்ந்து விடுவார்கள். தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். இப்படி நகைகளுடன் வரும் இந்தக்கும்பலிடம் பலர் ஏமாந்துள்ளனர். இவர்களிடம் கைப்பற்றியதில் பிரிட்டிஷ் விக்டோரியா மகாராணி படம் பொறித்த போலி தங்க நாணயமும் உண்டு. வசதியான பெரிய இடம், ஏமாந்தது வெளியே தெரிந்தால் மானம் போகும் என்ற பயத்தில் பலர் வெளியே சொல்வதில்லையாம். அதன் விளைவு பெங்களூர், சென்னை கோவை என்று பெரிய நகரங்களில் பெரும் பணக்காரர்களே ஏமாந்துள்ளனர். தற்போது சிவகிரி மோசடியில் சிக்கியுள்ளனர், என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்