தங்கராஜ் – கமலா தம்பதிகள் திருச்சியில் சஞ்சீவ் நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தெருநாய்களை பராமரிப்பதில் பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள். தெருநாய்களுக்காக தினமும் வீட்டில் உணவு தயாரித்து அந்த பகுதியில் உள்ள சுமார் 100 தெரு நாய்களுக்கு உணவு வழங்குவது வழக்கம். இந்த நிலையில் கரோனா வைரஸ் பிரச்சனையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளியே வருவதில் இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இதையும் மீறி இவர்கள் உணவு தயாரித்து பட்டினியால் வாடும் தெருநாய்களுக்கு கொடுக்கும்போது போலிசார் தடுத்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
இதனால் மனம் உடைந்து போன அந்த தம்பதிகள் முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பியுமான மேனகாகாந்தியிடம் புகார் செய்தனர். விலங்குகள் மீது அக்கறை கொண்ட மேனகாகாந்தி, அதற்கென்று தனி இயக்கம் நடத்தி வருகிறார். நீங்கள் மாவட்ட கலெக்டரிடம் நீங்கள் பேசி தெரு நாய்களுக்கு உணவு கொடுக்க அனுமதி வாங்கி தர வேண்டும் என்று மேனகா காந்தியிடம் உருக்கமாக பேசியிருக்கிறர்கள் தங்கராஜ் – கமலா தம்பதிகள். இதற்கு இடையில் மேனகாகந்தி அந்த தம்பதிகளிடம் நீங்கள் ஒரு மனு ஒன்று தயார் செய்து திருச்சி கலெக்டரிடம் கொடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
உடனே அந்த தம்பதிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவுடன் சென்று கலெக்டர் சிவராசனை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை குறித்து பேசியுள்ளனர். அப்பொது கலெக்டர், ''ஓ… நீங்க தான் அந்த தம்பதியரா? உங்களை பற்றி மேனகாகாந்தி என்னிடம் பேசினார்கள். நீங்கள் எந்ததெந்த பகுதியில் உணவு வழங்குகிறீர்கள் என்பது குறித்து எனக்கு விவரமாக கொடுங்கள். நான் உங்களுக்கு பார்த்து பரிசீலனை செய்கிறேன்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
பட்டினியில் வாடும் தெரு நாய்களுக்காக உணவு கொடுக்கும் அந்த வயதான தம்பதிகளுக்காக எம்.பி. மேனகாகாந்தி திருச்சி கலெக்டரிடம் பேசிய இந்த சம்பவம் நெகி்ழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.