சேலம் அருகே, தை அமாவாசை நாளில் அன்னதானம் வழங்குவதற்காக வகுப்பறையிலேயே உணவு சமைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள சவுரிபாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வெங்கடேசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தலைமையில் சக ஆசிரியர், ஆசிரியைகள் கூட்டாக சேர்ந்து தை அமாவாசை நாளான ஜன. 21ம் தேதியன்று பள்ளி வளாகத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பள்ளி வகுப்பறையிலேயே நள்ளிரவில் அடுப்பு மூட்டி உணவு சமைத்துள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு விதிகளை மீறி, பள்ளியை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியதாக சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இதுகுறித்த படங்கள் சமூக ஊடகங்களிலும் பரவின. இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரிக்கும்படி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். அதன்படி அவர் திங்கள் கிழமை (ஜன. 23) பள்ளியில் நேரடி விசாரணை நடத்தினார்.
உரிய அனுமதி பெறாமலும் ஒழுங்கு விதிகளை மீறியும் பள்ளிக்கூடத்தைப் பயன்படுத்தியதால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.