கரோனா பரவலின் காரணமாக இரண்டு முறை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது, கரோனா பரவலின் தாக்கம் குறையவே பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், வழிகாட்டு நெறிமுறைகளுடனும் சுற்றுலாத் தலங்கள் உட்பட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மக்களும் ஒன்றரை வருடமாக எங்கும் செல்ல முடியாமல் இருந்த மக்களும் தற்போது சுற்றுலாத் தலங்களில் படை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் மலைகளின் இளவரசி எனும் கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
இதனால், இங்கு உணவு உட்பட அனைத்து கடைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலாவதியான உணவுப் பொருட்களை உட்கொண்டும், ஆபத்து மிகுந்த குளிர்பானங்களைச் சிறுவர்கள் குடித்தும் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று உணவகங்களில் உணவின் தரத்தைப் பரிசோதித்து வருகின்றனர். நேற்று சென்னை தி.நகரில் திடீரென சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சுமார் 50 கிலோ அளவில் கெட்டுப்போன உணவுப் பொருட்களையும் 100க்கும் மேற்பட்ட குளிர்பானங்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், இன்று திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 70 கிலோவுக்கும் அதிகமான காலாவதியான இறைச்சிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் பறிமுதல் செய்த காலாவதியான இறைச்சியை அழித்தனர்.