கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் கனமழை மற்றும் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. விநாடிக்கு 2,03,759 கன அடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டது. அந்த தண்ணீரானது தற்போது கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தை கடந்து செல்கிறது.
தவிட்டுப்பாளையம் கரையோர பகுதிகளில் 105 வீடுகள் உள்ளன. தற்போது இப்பகுதிகளில் 42 வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக மீட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு உணவுகள், மருத்துவ வசதிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலம் காவிரி கரையோரப் பகுதிகளில் ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ, ஆடு மாடுகளை மேய்க்கவோ கூடாது என புகளூர் வட்டாட்சியர் முருகன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.