காவிரி காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 88 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரை பகுதிகளான அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பவானி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், கந்தன் பட்டறை, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை காலி செய்து கொண்டு உடைமைகளைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி பவானி கந்தன் நகர் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மக்களை வருவாய்த்துறையினர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.