சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் கொள்ளிடம்,பழைய கொள்ளிடம் கரை உடைப்பால் ஊருக்குள் புகுந்த தண்ணீரால் வெள்ளக்காடாக காட்சியளியளியளிக்கிறது குமராட்சி ஒன்றியம், குடிநீர் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர். வீடுகள் தண்ணீரில் மூழ்கியும், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் கிராம மக்கள் தண்ணீருக்கு தவிக்கிறது.
கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் மேட்டூருக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் அணையில் வினாடிக்கு 2 லட்சத்திற்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அருகே கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடத்தின் இரு கரைகளும் தொட்டவாறு சென்று கடலில் கலந்தது. வெள்ள நீர் கொள்ளிடத்தில் இரு கரைகளையும் தொட்டுகொண்டு ஓடியதால் பழைய கொள்ளிடத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. இதனால் ஆயிரக்கனக்கான வீடுகளும் பல ஆயிரம் ஏக்கர் பயிர்களும் தண்ணீரில் மூழ்கின.
வெள்ளம் பாதித்த பகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மூழ்கியுள்ள பயிகர்களை பார்த்தும், வீடுகளை பார்வையிட்டும், மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்கள். வல்லம்படுகை, கொள்ளிடம், எருக்கன்காட்டுபடுகை, வேளக்குடி, பழையநல்லூர், கண்டியாமேடு, சாலந்தோப்பு, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு ஒருவாரமே இருந்த நெற்பயிர், பொங்கள் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் முழ்கி அழுக தொடங்கி உள்ளன.
அதேபோல் கொள்ளிடக்கரையில் உள்ள திட்டுகாட்டூர், அக்கரைஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, பெராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சுற்றி வெள்ளநீர் செல்கிறது. இதனால் இந்த கிராமங்கள் தீவு கிராமங்களாக உள்ளது. கிராமத்தில் உள்ள மக்களை படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த பகுதி மக்கள் மேடான சாலையில் நின்று கொண்டு மூழ்கி உள்ள தங்களின் வீடுகளையும், அழுகி கொண்டுள்ள பயிர்களையுமே பார்த்து கொண்டுள்ளனர். இந்த கிராமங்களில் வாழை, அரும்பு, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூஞ்செடிகளும், தோட்டபயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.அனைத்தும் மூழ்கி உள்ளன.
கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்து ஓடியதால் குடிநீர் மேட்டார், பைப் உள்ளிட்டவை மூழ்கி உள்ளன. இதனால் குடிநீர் என்பது முற்றிலும் இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுமையான அளவில் குடிநீர் ஏற்பாடு செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேபோல் தீவனம் இல்லாமல் கால்நடைகளும் தவித்து வருகின்றன. இந்த கிராமத்தை சேர்ந்தவர்களே சிதம்பரம் நகராட்சிப்பகுதியிலிருந்து வாகனம் மூலம் குடிநீர் ஏற்பாடு செய்து தருகின்றனர்.
கொள்ளிடம் கரை உடைந்து கிராமத்திற்குள் புகுந்ததால் அங்கு இருந்த 300 க்கும் மேற்பட்ட முதலைகள் கிராமங்களுக்குள்ளும், வாய்க்கால்களுக்குள்ளும் புகுந்துள்ளதாக உடையார்குடி கிராமமக்கள் கூறினார்கள். மேலும் வீடுகளுக்கு செல்லமுடியவில்லை எனவும், வெள்ள நீருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தாலும் முதலைக்கு பயந்து தூக்கத்தையும் துறந்து நிற்கிறோம். வீட்டிற்கு சென்று பார்த்து வரலாம் என்று நீந்தி சென்றாலும் அங்கு முதலை படுத்து கிடக்கிறது திரும்பவந்துவிட்டோம் எனக்கூறுகின்றனர்.