தமிழகத்தில் கரோனா கடந்த 80 நாட்களாக தனது ஆட்டத்தை காட்டி வருகிறது, வகை தொகையின்றி சுனாமி வேகமெடுத்திருக்கிறது. இப்படியிருக்கும் கரோனா தொடர்பான முதல் வழக்கு நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரத்தில் பதிவாகியுள்ளது. வி.கே.புரம் ஊராட்சிக்கு சமீபமாக உள்ள சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட, புலவன்பட்டியின் கட்டபொம்மன் தெருவிலிருக்கும் வீட்டிற்கு கடந்த 8ம் தேதியன்று சென்னையிலிருந்து மாணவர் மற்றும் பெண் உட்பட 4 பேர் வந்துள்ளனர்.
அவர்களுக்கு நேற்று முன்தினம் அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 பெண்கள் மற்றும் மாணவர் உட்பட 3 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக அவர்களை சிகிச்சைக்கு அனுப்புவதற்காக அம்பை ஊராட்சி ஆணையர் சுசீலா பீட்டர் பி.டி.ஓ. சங்கரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
மண்டல துணை பி.டி.ஓ. சத்தியவாணிமுத்து, ஊராட்சி செயலர் வேலு சுகாதார மேற்பார்வையாளர் பெல்பின் உள்ளிட்டோர்கள் அவர்களை பாளை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வந்தனர். மேலும் ஸ்பாட்டுக்கு வந்த அம்பை தாசில்தார் கந்தப்பன், சிவந்திபுரம் வி.ஏ.ஓ. குருகுலராமன் ஆகியோர் ஏற்பாடுகளைக் கவனித்தனர். இந்த நிலையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வர முடியாது என்று அடம்பிடித்து தகராறு செய்ததுடன், தாசில்தாரையும் வி.ஏ.ஓ.வையும் மேற்கொண்டு பணி செய்யவிடாமல் தடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் பலதடவை வேண்டுகோள் விடுத்தும் வேண்டுமென்றே நேரத்தைக் கடத்திய கரோனா நோயாளி மற்றும் அவரது உறவினர் ஒருவரும் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.
பின்னர் ஒரு வழியாக மூவரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தாசில்தாரின் உத்தரவுபடி வேண்டுகோள் விடுத்தும், வர மறுத்துத் தகராறு செய்து, அடம் பிடித்த கரோனா நோயாளி மற்றும் அவரது உறவினர் ஒருவர் மீதும் வி.ஏ.ஓ.குருகுலராமன் வி.கே.புரம் போலீசில் புகார் செய்தார்.
அதிகாரிகளை உரிய பணி செய்ய விடாமல் தடுத்ததாக கரோனா நோயாளி உட்பட இருவர் மீதும் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிவு செய்தார். தமிழகத்தில் கரோனா தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் கிரிமினல் வழக்கு இதுவாகத்தானிருக்கும் என்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள்.