பட்டாசு வெடித்த மாணவர்களை கண்டித்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் புகார்
திருச்சி மாவட்டம், பாலக்கரை அருகிலுள்ள கீழப்புதூரில் செர் வைட் மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை முடிந்து வியாழனன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. பள்ளியில் காலை 9.20- மணி அளவில் இறை வணக்கம் தொடங்கியதும், தீபாவளி பண்டிகைக்கு யாரெல்லாம் பட்டாசு வெடித்தது என்றும் அவர்கள் கையை தூக்குங்கள் என்றும் ஆசிரியர்கள் கேட்டுள்ளனர்.
மொத்தமுள்ள மாணவர்களில் ஏழு பேரை தவிர மற்ற மாணவ-மாணவிகள் தாங்களெல்லாம் பட்டாசு வெடித்ததாக கூறி கையை தூக்கி உள்ளனர். அப்போது, பட்டாசு வெடிக்காத ஏழு மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பள்ளியின் சார்பில் சுற்றுச்சூழ மற்றும் மாசு ஏற்படுதமைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பட்டாசு வெடித்ததாக கூறிய மற்ற மாணவ-மாணவிகளை கைகளை கட்டிக்கொண்டு இறை வணக்கம் முடியும் வரை தலை குனிந்து நிற்கும்படி கூறி தண்டனை வழங்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவ- மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம் இது பற்றி கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் அங்கு திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டு, தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக மாணவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில், “எங்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தான் மாணவ-மாணவிகளை பட்டாசு வெடித்ததை கண்டித்ததாகவும் கூறி உள்ளனர்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர். இது தொடர்பாக பாலக்கரை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவசுப்பிரமணியன்