நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் தில்லை குமார். இவர் குமாரபாளையத்தில் பட்டாசு குடோன் வைத்திருக்கிறார். புத்தாண்டு வரவுள்ளதால், விற்பனை செய்வதற்காக மோகனூரில் உள்ள தனது வீட்டில் அதிக அளவில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென தீப்பற்றியதால் தில்லை குமார் வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளது. அத்தோடு வீட்டிலிருந்த சிலிண்டர் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வெடித்துச் சிதறியதால் அருகில் இருந்த 4-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. பல வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து, மேற்கூரைகள் விழுந்துள்ளன.
இந்த விபத்தில் தில்லை குமார், அவரது மனைவி பிரியங்கா, தாய் செல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெரியக்காள் என்ற வயதான மூதாட்டியும் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடனும், 6 பேர் லேசான கரங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். வருவாய் மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகளவில் பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்ததால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.