Skip to main content

ஒருபுறம் கோபம்; மறுபுறம் மகிழ்ச்சி! -அமைச்சரை சந்தித்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020


‘இந்த பக்கம் குறைச்சிட்டு, அந்த பக்கம் கூட்டிட்டாங்க! புலம்பும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்!’ என்னும் தலைப்பில் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை, 12 சதவீதமாகக் குறைத்த மத்திய அரசு, கையால் தயாரிக்கும் தீப்பெட்டிக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியிருக்கிறதென்றும்,  இதற்கு தீப்பெட்டி  உற்பத்தியாளர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறதென்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

Firebox manufacturers Minister meet

 



இது, ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்பட்டதன் காரணமாக, மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்திய தீப்பெட்டி  உற்பத்தியாளர்கள், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து நன்றி தெரிவித்தது குறித்த செய்தி. 

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம்,   விருதுநகர், மாவட்டத்தில் விருதுநகர்,   சிவகாசி, சாத்தூர், நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டத்தில்  குடியாத்தம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20-க்கும் மேற்பட்ட முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகளும், இவற்றைச் சார்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில்,  ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.  ஏற்கனவே,  மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு மற்றொரு பிரச்சனையாக மத்திய அரசு  விதித்துள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு பாதிப்பை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனைத்தொடர்ந்து,  தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரி,  18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  இந்நிலையில்,  ஜிஎஸ்டி வரி 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன், செயலாளர் பயோனியர் குரூப் ரமேஸ்பிரபு,  அய்யன் குரூப் அதிபதி, சுந்தரவேல் குரூப் ஸ்ரீராம் அசோக், காளீஸ்வரி செண்பகராஜன், சௌந்திரபாண்டியன் குரூப்  கார்த்திகேயன்,  சாத்தூர் ரவி, தினேஷ், பத்மநாபன், கோவில்பட்டி தேவதாஸ்  மற்றும் தொழிலதிபர்கள் அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

கையால் தீப்பெட்டி தயாரிப்பவர்கள் ஜி.எஸ்.டி. வரி உயர்வால் நொந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் நன்றி தெரிவிக்கும் படலம் நடந்துகொண்டிருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்